தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.065 கோடி மகளிர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த திட்டத்தில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. நிராகரிக்கப்பட்ட காரணத்தையும் அவர்களது கைப்பேசி எண்களுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தகுதி இருந்தும் நிராராகரிக்கப்பட்டவர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் இ சேவை மையங்கள் மற்றும் இன்டர்நெட் மையங்களிலும் பெண்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் பணம் வராத விண்ணப்பதாரர்கள் எந்தந்த ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று பலருக்கு தெரியவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேல்முறையீட்டிற்கு வருபவர்கள் இ சேவை மையத்துக்கு வரும் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் கொண்டு வரவேண்டும் மற்றும் செல்போனில் வந்துள்ள குறுஞ்செய்தியை காண்பித்து மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள ஆய்வுக்கு எப்போது
இந்த மேல்முறையீட்டு மனுவை ஆர் டி ஓ ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விண்ணப்பங்களை தேர்வு செய்ய, விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு சென்று விசாரிக்க தேவையான ஊழியர்களை தாசில்தார் ஏற்பாடு செய்து வருகிறார். இதன் அடிப்படையில் கள ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு தகுதியான பயனாளிகளை உரிமைத்தொகை திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.