தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இதேபோல் 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் 5ஆம் தேதி வரையும், 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதன் காரணமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு கோடை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே ஜூன் 10ஆம் தேதிக்கு பதிலாக மேலும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கைகள் வைக்க தொடங்கியுள்ளனர். இதனால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை முடிய ஒரு சில நாட்களே உள்ளதால், தமிழக பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறை நீட்டிப்பு குறித்து கலந்து ஆலோசித்து நல்ல முடிவை அறிவிக்கும் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.