தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து கோடை வெப்பம் அதிகரித்தால் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு தேர்வுகளும், மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற்றன. இது தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறையை மாணவர்கள் வெளியூர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கோடை வெளியிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா என பெற்றோர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது, "வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும்" என்றார். மேலும் வெப்பத்தை பொறுத்து அந்த நேரத்தில் முதலமைச்சர் ஆலோசனைப்படி பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்; கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அப்போதைய வெயிலின் தாக்கம் எப்படி இருக்கிறதோ அதன்படி முதல்வரிடம் ஆலோசனை செய்து பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.
எனவே அடுத்து வரும் நாட்களின் வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் வெளியூர் சென்றுள்ள பெற்றோர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே அறிவித்தால் நன்றாக இருக்கும் என்றும், கடைசி ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிட்டால் மீண்டும் திரும்பி வருவதற்கு சிரமமாக இருக்கும் என்றும், இதனால் பேருந்துகள், ரயில்கள், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். கடைசி நேர திட்டமிடலால் டிக்கெட் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.எனவே முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு பற்றி அறிவிப்பு வெளியிட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஜூன் மாதமும் வெயிலின் தாக்கம் அதிகரித்தால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை முன்கூட்டியே தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.