தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாகவும் துவரம் பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயதான முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும், உதவித்தொகையும் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹3,000 முதல் ₹5,000 வரை ரொக்கப் பணம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் தமிழ்நாட்டில் மகளிர் சுயதொழிலுக்காகப் பெண்களுக்கு ₹10,000 நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை அறிவிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனவரி முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளனர். அப்போது, பெண்களுக்கான இந்த ₹10,000 நிதியுதவி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகை வருகிறது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புக்கு அரசு முக்கியத்துவம் தருவதாக தெரிகிறது. இதை தவிர பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறும் பொருட்கள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த முறை தரமான பொருள்கள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, ஜனவரி 3 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 9 முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதம் மாதம் 15-ம் தேதி தகுதியான பெண்களுக்கு ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன் கூட்டியே உரிமைத் தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
