மத்திய அரசு பெண்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் மானியமாக ரூ.300 வழங்குவது குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், ஏழை எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களால் அதனை எளிதாக வாங்க முடிவதில்லை. அதனால்தான் இந்த நிலையை மாற்றி, ஏழை எளிய பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவவும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதுதான் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் (Pradhan mantri ujjwala yojana) ஆகும். தற்போது "பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0" என்ற புதிய வடிவம் நடைமுறைக்கு வந்து, கோடிக்கணக்கான பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்களை மத்திய அரசு கொடுத்து வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு முதல் சிலிண்டர் மற்றும் அதற்கான ரெகுலேட்டர் ஆகியவை முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றன. இது தவிர, சமையல் எரிவாயு அடுப்பு வாங்குவதற்கும், முதல் முறை சிலிண்டரை நிரப்புவதற்கும் தேவையான நிதியுதவியையும் அரசே வழங்குகிறது. அதுமில்லாமல், பெண்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு சிலிண்டருக்கும் மத்திய அரசு 300 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களின் வங்கித கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே, இந்த எரிவாயு இணைப்புகள் அனைத்தும் குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயரிலேயே வழங்கப்படுகின்றன.
தகுதிகள் :-
*விண்ணப்பிக்கும் பெண் கண்டிப்பாக 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
*ஏழை எளிய மக்கள் அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நலிந்த பிரிவைச் சேர்ந்த குடும்பமாக அது இருக்க வேண்டும்.
*அந்த்யோதயா அன்ன யோஜனா எனப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
*எல்லாவற்றிற்கும் மேலாக, விண்ணப்பதாரரின் குடும்பத்தில் ஏற்கனவே வேறு எந்த ஒரு எல்பிஜி எரிவாயு இணைப்பும் இருக்கக்கூடாது.
தேவையான ஆவணங்கள்:-
ரேஷன் கார்டு, இதனுடன் முகவரிச் சான்று, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், விண்ணப்பிக்கும் பெண்ணின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மொபைல் எண் ஆகியவை தேவைப்படும். மானியத் தொகை நேரடியாக வந்து சேர வேண்டும் என்பதால், விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு விவரங்களையும் சரியாகக் கொடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாகச் சென்று இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். இல்லாவிட்டால் இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிக்கலாம். நீங்கள் கொடுக்கும் விவரங்கள் அனைத்தும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, தகுதி உறுதி செய்யப்பட்டவுடன் உங்களுக்கான இலவச எல்பிஜி கேஸ் இணைப்பு உடனடியாக வழங்கி வைக்கப்படும்.
