குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஏழை பெண்களின் உழைப்புக்குக் அங்கீகாரம் கொடுப்பதற்காகவும், வறுமையை ஒழிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசால் செப்டம்பர் 15-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அரசின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15 ஆம் தேதி ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதை வைத்து பெண்கள் தங்களுடைய அன்றாட குடும்ப செலவுகளை செய்துக் வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir urimai thogai) திட்டத்தை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், புதிய மறு சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் முதியோர் உதவித்தொகை என்ற திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். இதனால் இதுவரையில் ரூ.1,000 பெற்று வந்த அவர்களுக்கு மாதா மாதம் ரூ.3,000 வழங்கப்படும். அதேபோல 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் தோறும் மகளிர் உரிமை தொகையாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வடமாநிலத்தவர்கள், உரிய தகுதிகளை பெறாதவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகப்பெரிய அளவில் மறுசீரமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தவெக தேர்தல் வாக்குறுதியில் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 60 வயதுக்கும் மேற்பட்ட பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக ரூ.3000 வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு ஏற்கனவே பலமுறை விண்ணப்பித்தும் சில பெண்களின் விண்ணப்பம் மட்டும் ஒருசில காரணங்களுக்காக தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக வட்டாட்சியர் அலுவலங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், மின் கட்டண ரசீது ஆகிய ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி வங்கி பாஸ்புக் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் போது, இந்த உரிமைத் தொகை முதலில் யாருக்குக் கிடைக்கும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. தற்போது வழக்கமாக மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பயனாளிகளுக்கே இந்த உயர்த்தப்பட்ட தொகை முதலில் வழங்கப்பட உள்ளதாகத் கூறப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து, பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு, பின்னர் மேல்முறையீடு செய்த விண்ணப்பதாரர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவர்களில் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களில் இப்பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
