தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாகவும் துவரம் பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவரை ஒரே குடும்பமாக இருந்த பலர், தனி ரேஷன் கார்டுக்கு, விண்ணப்பிக்க தொடங்கினார்கள். இதனால் உணவு வழங்கல் துறைக்கு விண்ணப்பங்கள் அதிகமாக குவிந்தது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு ஏழு மாதங்களாகியும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் முதற்கட்டமாக 45 ஆயிரத்து 509 புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது.
புதிய அட்டையை பெற்றுக் கொண்டு ரேஷன் கடைகளில் உள்ள ரேகை சரிபார்ப்பு கருவி மூலம் சரிபார்த்து ரேஷன் பொருள்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் குடும்ப அட்டைதாரர்களிடையே மகிழ்ச்சியை தந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் புதிய ரேஷன் அட்டை கிடைக்கும் எனவும், புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் எண்ணெய், பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நியாயவிலைக் கடைகளில், குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும் என்றும், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நியாயவிலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.