தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தங்களுக்கு வாக்குகளை சேகரிக்க கவர்ச்சிகரமான திட்டங்களையும் வாக்குறுதிகளையும் வெளியிடுவார்கள். இதில் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது நகைக்கடன் தள்ளுபடியாகும். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விவசாயக்கடன், பயிர்கடன், நகைக்கடன், கறவை மாடு, சிறு வணிக கடன், கிணறு வெட்டுதல், ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பதற்கும், மூங்கில் வாங்குதல் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், தங்க நகை அடமானத்தில் கடன் வழங்குகின்றன. கடந்த சட்ட சபை தேர்தலின் போது, திமுக அறிக்கையில், தாங்கள் வெற்றி பெற்றால் கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தது.அதன்படி, கூட்டுறவு நிறுவனங்களில், 2021ஆம் ஆண்டு மார்ச் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதனடிப்படையில், 14 லட்சத்து 51 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 6,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.