தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர், இதனையடுத்து 1 கோடியே 15 லட்சம் பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையைப் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் பல்வேறு காரணங்களுக்காக சுமார் 60 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கு எப்போது மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என குடும்ப தலைவிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
இந்த திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய ரேஷன் அட்டை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் யாரும் மத்திய, மாநில அரசு ஊழியர்களாக இல்லாத குடும்ப பெண்கள், தொழில் வரி ஏதும் கட்டாத குடும்ப பெண்கள், வருமான வரி கட்டாத ஏழை, எளிய குடும்ப பெண்களாக இருக்க வேண்டும். 5 ஏக்கர் நன்செய் நிலங்கள், 10 ஏக்கர் புன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்களின் குடும்ப பெண்கள் விண்ணப்பிக்கலாம். 21 வயது நிரம்பிய பெண்களாக இருக்க வேண்டும். குடும்ப தலைவி இல்லாத குடும்பத்தில் வேறொரு தகுதியான பெண்கள் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் இருந்தால், அவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேபோல், அரசின் வேறு திட்டங்களில் ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களை தவிர தகுதியான பெண்கள் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், முன்னாள் அரசு ஊழியர்கள் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான பென்சன் பெறுபவர்களாக இருந்தால் அவர்களின் குடும்பத்தில் தகுதியான பெண்கள் இருப்பின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், அரசு மானியத்தில் வாழ்வாதாரத்துக்காக டிராக்டர் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை வாங்கிய குடும்பத்தினரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் என்ன
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மொபைல் எண் ஆகும்.