தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் கையெழுத்திடப் போகும் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டங்கள் குறித்த அதிரடித் தகவல்கள் தற்போதே கசியத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக தனது தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் தவிர்த்து அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அதிரடி வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், இத்திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறைகளை வகுக்க கால அவகாசம் தேவைப்படும். இதனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் சிறப்புத் தொகுப்பாக ரூ.5,000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், புதிய அரசு பதவியேற்றவுடன் ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பழைய திட்டத்தில் இருந்த பொருளாதாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, “அனைவருக்கும்” என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தபடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் முற்றிலும் இலவசமாகப் பயணிக்கும் ‘வெற்றிப் பயணம் திட்டம்’ மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் ‘இலவச மின்சாரத் திட்டம்’ ஆகிய இரண்டு மெகா நலத்திட்டங்களின் கோப்புகளில்தான் விஜய் தனது முதல் முதலமைச்சர் கையெழுத்தைப் போட வாய்ப்புள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக அரசு சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கி வரும் நிலையில், தவெக அதை விரிவுபடுத்தி “அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும்” பொருந்தும் வகையில் செயல்படுத்துவது இல்லத்தரசிகள் மற்றும் உழைக்கும் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
