Header Ads Widget

<

மகளிர் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படுமா? வெளியான அறிவிப்பு பெண்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ரூ.2500 இந்த மாதம் வழங்கப்படுமா  அல்லது ரூ.1000 வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிய தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான நிதியுதவித் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து, திமுகவின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை மாற்றி 'மதிப்புமிக்க மகளிர் திட்டம்' என்ற பெயரில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் எனும் வாக்குறுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் வெற்றி கழகம் அரசு பொறுப்பேற்ற மே மாதத்திலேயே ரூ.2,500 உயர்வு கிடைக்கும் என்று பல பயனாளிகள் நம்பினர். ஆனால் அரசு தரப்பில் "திட்டத்தை மறுசீரமைப்பு செய்யக் கால அவகாசம் தேவை" என்று தெரிவிக்கப்பட்டு, மே மாதத்திற்கு வழக்கமான ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். எனவே இந்த மாதம்  ஜூன் 15 அன்றும் ரூ.1,000 தொகை வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிபடி ரூ.2500 இந்த மாதம் வரவு வைக்கப்படாது என்றும்,  இன்னும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாத நிலையில், அரசாணை இல்லாமல் தொகையை உயர்த்த முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் தற்போது சுமார் 1.3 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். ரூ.1,000 வழங்க மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.15,600 கோடி தேவைப்படுகிறது. இதை ரூ.2,500 ஆக உயர்த்தினால் ஆண்டுக்கு ரூ.39,000 கோடிக்கு மேல் செலவாகும். ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் மாநிலத்திற்கு இது பெரும் சவாலாக அமையும். இதனால் முதல்வர் விஜய், மாநிலத்தின் உண்மையான நிதி நிலை குறித்த 'வெள்ளை அறிக்கை' தயாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்தல் அறிக்கையின்படி 60 வயதுக்குள் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ரூ.2,500 என்ற நிபந்தனை உள்ளது. தற்போதைய பயனாளிகளில் 15% பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பதால், அவர்களை முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றும் பணியும், தகுதியற்ற கார்டுகளை நீக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அரசு வட்டாரங்களின் தகவலின்படி, ஜூன் இறுதி அல்லது ஜூலை மாதத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது 'மதிப்புமிக்க மகளிர் திட்டம்' குறித்த முழு அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில அதிகாரிகள் ஒரே முயற்சியில் ரூ.2,500 உயர்வுக்கு பதிலாக முதற்கட்டமாக ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்தி படிப்படியாக இலக்கை எட்டும் திட்டத்தையும் ஆலோசித்து வருகின்றனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதிய அரசாணை வெளியாகும் வரை பயனாளிகள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற உறுதியுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்கான நிதியை கையிருப்பில் வைத்துதான் அதைச் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஜூன் 15-ல் வழக்கமான ரூ.1,000 மட்டுமே வரும் என்பதை பயனாளிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.